search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூலூர் விபத்து"

    சூலூர் அருகே விபத்து நடந்த நேரம் மழை கொட்டியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இல்லாவிட்டால் லாரியில் இருந்த அனைத்து டயர்களும், லாரியும் எரிந்து சேதம் ஆகி இருக்கும்.

    சூலூர்:

    கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு நேற்று சுமார் 150 டயர்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.

    சூலூர் அருகே எல்என்டி புறவழிச்சாலையில் அந்த லாரி இரவு சுமார் 9 மணியளவில் வந்து கொண்டிருந்தது. லாரியை மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த கண்சாம்நாத் ஓட்டி வந்தார். இந்நிலையில் சிந்தாமணிப்புதூர் அருகே சுங்கச்சாவடி பகுதிக்கு வந்தபோது திடீரென லாரி தீப்பற்றிக் கொண்டது.

    உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். லாரி தீ பற்றிய செய்தியை அறிந்த சூலூர் தீயணைப்பு படையினர் தீயணைப்பு அலுவலர் கோபால் தலைமையில் அப்பகுதிக்கு வந்து சேர்ந்தனர். ஆனால் அதற்குள்ளாக லாரியின் முன்பகுதி முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது.

    தீயணைப்பு படையினர் லாரியின் பின் கதவை உடைத்து திறந்து அதில் இருந்த டயர்களை கீழே இறக்கினர். பின்னர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதில் சுமார் இருபது டயர்கள் தீயினால் சேதமடைந்தன. தீயணைப்பு படையினரின் முயற்சியால் மற்ற டயர்கள் சேதமின்றி தப்பின. லாரியில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    விபத்து நடந்த நேரம் மழை கொட்டியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இல்லாவிட்டால் லாரியில் இருந்த அனைத்து டயர்களும், லாரியும் எரிந்து சேதம் ஆகி இருக்கும்.

    கோவை மாவட்டம் சூலூர் அருகே வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    சூலூர்:

    கோவை சூலூர் அருகே உள்ள சித்தநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் தினேஷ் (வயது 27). இவர் அப்பநாயக்கன் பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு இவர் தன்னுடன் வேலை பார்க்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்தி (22), ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காளிங்கராயபுரத்தை சேர்ந்த செல்லபாண்டியன் என்பவரது மகன் முத்து கார்த்திக் (24) ஆகியோரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சித்தநாயக்கன்பாளையத்தில் இருந்து அப்பநாயக்கன்பட்டிக்கு சென்றார்.

    மோட்டார் சைக்கிள் பல்லடம் ரோட்டில் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்று கொண்டு இருந்த கோழி வேன் மீது மோதி விபத்தானது.

    இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே தினேஷ் பரிதாபமாக இறந்தார். அதன் பின்னர் முத்து கார்த்திக் இறந்தார்.

    உயிருக்கு போராடிய கார்த்திக்கு கோவை அரசு ஆஸ்பத்தியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை உறவினர்கள் மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இந்த விபத்து குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சூலூரில் இன்று காலை நின்ற லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் கல்லூரி பெண் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 7 பயணிகள் படுகாயமடைந்தனர்.
    சூலூர்:

    திருச்சியில் இருந்து கோவைக்கு இன்று அதிகாலை ஒரு அரசு பஸ் புறப்பட்டு வந்தது.

    காலை 5.45 மணி அளவில் சூலூர் பெட்ரோல் பங்க் பகுதியில் வந்த போது, அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக பஸ் மோதியது.

    இதில் பஸ்சின் முன்புறம் நொறுங்கியது. பஸ்சில் இருந்த பயணிகள் சிலர் படுகாயம் அடைந்து அலறித் துடித்தனர். அப்பகுதி பொது மக்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதில் திருச்சி சமயபுரத்தை சேர்ந்த தனியார் கல்லூரி பெண் ஊழியரான அழகு ஜோதி (வயது 28) என்பவர் பரிதாபமாக இறந்தார். இவர் வேலை விசயமாக கோவைக்கு வந்த போது விபத்தில் சிக்கி இறந்துள்ளார். கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த பரிமளம்(60), சித்ரா (48), பவித்ரா(23), முத்துலட்சுமி (50), மதுக்கரையை சேர்ந்த சின்னம்மாள்(50), போத்தனூரை சேர்ந்த சாம்சன் (56), புதுக்கோட்டையை சேர்ந்த பாண்டி ஆகிய 7 பேர் அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடலூரை சேர்ந்த வீரப்பன் (47) என்பவர் சிமெண்டு லோடு ஏற்றுவதற்காக லாரியை ஓட்டி வந்துள்ளார். இவர் சாலையோரம் லாரியை நிறுத்தி விட்டு கடைக்கு சென்ற போது தான் விபத்து நிகழ்ந்துள்ளது.

    விபத்து குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×